top of page
Search

குருவாசம் - தவறறிதல்


தவறிழைக்காத மனிதர்கள் என்று யாரையும் சொல்வதற்கில்லை. ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் ஒரே முறையில் அல்லாது மாறுபட்டே காணப்படுகின்றன. அவ்வாறு ஒருவருக்கொருவர் மாறும் பட்சத்தில் எது சரியானது முறையானது என்பதில் ஒரு அளவுகோலோ, முறையோ. நேர்த்தியோ அறுதியிட்டு கூறுவது கடினமான ஒன்று. இருந்தபோதிலும் ஒருவர் செய்யும் செயல் பிறரை பாதிக்கின்றது என்ற பட்சத்தில் அது முறையற்ற செயல் என்றோ தவறு என்றோ புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யப்படும் செயல் ஒழுக்க நெறிக்கு உட்படாமல் தன்னையும் பிறரையும் பாதிக்கக்கூடிய வகையில் அமையுமானால் அது ஒழுங்கீனமாகவோ தவறான செயலாகவோ கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு தவறே இழைக்காதவர் என்று ஒருவரை கூறுவது மிகக் கடினமான ஒன்று. ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்தாலும் அவர் அறிந்த ஞானத்தாலும் செயல்களை செய்து அதன் பயனை அடைகின்றனர்.

செயலை செய்யும்போது செயலின் காரணமாகவோ செயல் செய்யப்படும் முறையின் காரணமாகவோ அதை அனுபவித்தே தெளிவு பெறுகின்றனர். ஆகையால், ஒவ்வொருவரும் முதல்முறை செய்யப்படும் தங்கள் செயலில் நேர்த்தியாக செய்தனர் என்று சொல்லுவதற்கில்லை. நேர்த்தியாக செய்யப்படாத எது ஒன்றுமே சரியான ஒன்று என்று எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. ஆகவே அது தவறானதாகவோ அல்லது சில பல குறைகள் நிறைந்ததாகவோ இருக்கலாம். எனவே அனைவரும் தவறிழைத்து அதை உணர்ந்த பிறகு மாற்றியோ. திருத்திக் கொண்டோ அந்த அனுபவத்தினால் பெற்ற கல்வியினால் நேர்த்தியாகவும், சரியாகவும் செயல்பட செய்கின்றனர். எனவே மனிதனாக பிறந்தவர்கள் தவறு செய்துவிட்டோம் என்று வருந்த அவசியமில்லை. ஆனால் அதை பற்றிய அறிதலோ, புரிதலோ, தெளிதலோ இல்லாமல் இருப்பது தவறான ஒன்று.

ஒருவர் செய்த செயல் என்ன விளைவை தருகிறது என்பதை பற்றி அவர் தெரிந்திருக்க வேண்டும். அதாவது செய்யப்படும் செயல் அதன் தாக்கம், அதன் விளைவு எந்த விதமான பாதிப்போ அல்லது பலனோ தரவிருக்கிறது என்பதைப் பற்றிய அறிவு வேண்டும். சிலர் தாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் கண்மூடித்தனமாக தன்னம்பிக்கையை வைத்திருப்பர். நான் சரியானவற்றை தான் செய்திருக்கிறேன். நான் செய்தது அனைத்துமே நன்மையிலேதான் முடியும் என்று.

இப்படி அவர்களே அவர்கள் செய்த செயலுக்குச் சான்று வழங்கி கொள்வர். அவ்வாறன்று ஒரு செயல் செய்ததினால் அது செய்யப்பட்ட சூழலுக்கும், காலத்திற்கும், இடத்திற்கும் சம்பந்தப்பட்ட நபருக்கும் எந்த விதமான பலனையோ, பாதிப்பையோ. ஏற்படுத்துகிறது என்பதை பற்றி அறிந்து செய்த செயல் தவறானதா சரியானதா என்பதை ஒருவர் அறிய வேண்டும்.

அவ்வாறு ஆராயப்படும்பொழுது, அதில் தவறு. செய்த நபரின் மீது இருந்தால் அந்த செயல் தவறானது என்பதையும். அந்தச் செயலை செய்தது தான் என்பதையும் மனதில் அறிய வேண்டும். இதைத்தான் தவறை அறிதல் என்கிறோம்.

செயல்விளைவை பற்றிய ஞானம் இருந்தாலே தவறை பற்றிய அறிவு வெளிப்படும்.

நடந்த தவறு எவ்வாறு நடந்தது. அதற்கு காரணமாக நாம் எப்படி அமைந்தோம். செயல் நடந்தேறிய விதம் எவ்வாறு இருந்தது. இந்த விளைவை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இச்செயல் செய்யப்பட்ட முறை என்ன? என்பதை பற்றிய புரிதல் வேண்டும். அதாவது ஒரு செயல் செய்யப்படும் போது அது தவறான செயல் என்று அறிந்து கொண்டவுடன் ஏன் அவ்வாறு தவறாக அது அரங்கேறியது; அதற்கான காரணம் என்ன? செயல் செய்த விதமா. சூழலா, நபரா இதற்கு யார் காரணம் என்பதை பற்றிய புரிதல் வேண்டும். இதைத்தான் தவறை புரிந்து கொள்ளுதல் என்கிறோம். புரிதல் என்பது தவறுக்கான மாற்றுதலுக்கு மிகவும் உதவிகரமாக அமையக்கூடும்.

ஒரு தவறு நடந்துவிட்டது. தவறுக்குக் காரணம் புரிந்துவிட்டது. ஏன் அவ்வாறு தவறாக நடந்தது என்பதை பற்றிய புரிதல் இருக்கின்றது. இனி இதை மாற்ற வேண்டும் என்ற உணர்வு வேண்டும். ஏனெனில் தவறு செய்யப்படும்போது இது நம்மையோ, பிறரையோ பாதிக்கிறது என்பதை அறிந்து தவறை மாற்ற வேண்டும். இதனால் பாதிப்புகள் ஏற்படுகிறது. விளைவுகள் பிறரையும் நம்மையும் பாதிக்கின்றது என்பனவற்றை அறிந்து மாற்ற வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.

அத்தகைய உணர்வில் இருந்தால் மட்டுமே மாற்றுதலைத் தேடி எண்ணம் எழும். அவ்வெண்ணமே மாற்றுதலுக்கு வழியைத்தரும். மனப்பூர்வமாக தவறை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுவதற்கு உணர்வே காரணம். அதற்கு அச்செயலினால் ஏற்படுகிற விளைவுகள், பாதிப்புகள், பயன்கள், பாதிப்புகளினால் ஏற்படுகிற கஷ்டநஷ்டங்கள் இவைகளை உணர்தலின் மூலமே இவற்றை மாற்ற இயலும்.

அறியப்பட்ட ஒன்று புரிந்து கொண்ட பிறகு மாற்ற வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி மாற்றியே தீர வேண்டும் என்ற தெளிவு வேண்டும். தவறை திருத்தி கொள்வதற்கோ மாற்றி கொள்வதற்கோ. எதிர் செயல் செய்வதற்கோ என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஞானமும் அறிவும் மாற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியமுமே தெளிவாகும். அவ்வாறு மாற்றுவதன் மூலமே ஒருவன் ஒழுக்கமானவனா என்பதும், நன்னெறி கொண்டவரா என்பதும். நல்ல கர்மாவில் வாழ்கிறானா என்பதும் உறுதிப் படுத்திக்கொள்ள முடியும்.

தவறை தவறு என்று அறிந்து ஏன் அது தவறு எப்படி தவறானது என்பதை புரிந்து இது தவறானது இத்தகைய விஷயங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்து. அவற்றை மாற்றி நல்வழி படுத்துவது தெளிவு.

இவை நான்கும் செய்யப்படும் தவறிலிருந்து நம்மை மாற்றி நல்வழி படுத்திக்கொள்ள உதவும். தவறு என்று அறிதல், ஏன் அது தவறு என்று புரிதல், தவறை மாற்ற வேண்டும் என்று உணர்தல், மாற்றும் வழியில் தெளிதல், இவை தவறை திருத்தவும் நல்வழிப்படுத்தவும் உதவும்.


 
 
 

Comments


bottom of page